திருப்பத்தூர் மாவட்டத்தில் - ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘தேர்தல் தொடர்பான’ விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு அவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தேர்தலில் 100 சதவீதம் வாக் களிப்போம் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஏற்படுத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘100 சதவீதம் வாக்களிப்பீர்’, ‘வாக்களிப்பது நமது கடமை’ என்ற விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு, அதை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று விநியோகம் செய்தார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் சிறப்பாகவும், அமைதியாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களை எளிதாக சென்றடையும் பொருட்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு களை ஏற்படுத்தி வருகிறோம். ஏற்கெனவே, குடிநீர் கேன், சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளோம். அந்த வகையில் தற்போது ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப் புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு இன்று (நேற்று) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப் படுகிறது.

அதில், தேர்தல் நாள், 100 சதவீதம் வாக்களிப்பீர், வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தினசரி காலையில் பால் பாக்கெட்களை கையில் எடுக்கும்போது, இந்த விழிப் புணர்வு வாசகம் அவர்களது எண்ணத்தில் பதிந்து தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்க வருவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஆவின் பால் பாக்கெட்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெறும்.

எனவே, வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முழு அளவில் பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், ஆவின் உதவி பொது மேலாளர் (விற்பனை) சாந்தகுமார், துணை மேலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்