காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் - வாக்கு எண்ணும் மையத்தில் வேலூர் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் வாக்குஎண்ணும் மையத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அந்த வகையில், காட்பாடி சட்டப்பேரவைத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் காட்பாடி காந்திநகர் மேற்குப் பகுதியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகிறது. இதற்காக அங்கு வாக்கு எண்ணும் மையம் தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முக சுந்தரம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, தேர்தல் பார்வையாளர் அறை, வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

பிறகு, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அமரும் இடம், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை விட்டு நாற்காலிகளை அமைக்கவும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கரோனா பரவலை தடுக்ககூடுதலாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப வாக்கு எண்ணும் மேஜைகள் அதிகரிக்கவும், சமூக இடைவெளியை விட்டு மேஜைகள்,நாற்காலிகள் அமைக்கவும், வேட்பாளர் களின் முகவர்கள் தனியாக வந்து செல்ல வழி அமைக்கவும் அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணிய கோட்டி, செயற்பொறியாளர் சங்கர லிங்கம், உதவி செயற்பொறியாளர் பழனி, காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், சட்டக்கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்