திருப்பத்தூரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் 30 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் பெரிய வெங்காயப்பள்ளி பனமரத்து வட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (50). இவர். கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தான் வளர்த்து வந்த ஆடுகளுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் கால்நடை மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முறையிட்டுள்ளார். அதன்பேரில், நேற்று காலை கால்நடை மருத்துவர் ஒருவர் வீட்டுக்கு வந்து நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தி, ஆடுகளை வெளியே மேய்ச்சலுக்கு விடவேண்டாம், ஒரு நாள் முழுவதும் கொட்டகையில் அடைத்து வைக்குமாறு கூறிவிட்டு சென்றார்.
ஆனால், மருத்துவர் சென்ற சிறிது நேரத்தில் ராஜா தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து கொட்டகையில் அடைத்தார். சிறிது நேரத்தில் 30 ஆடுகளும் ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா உடனே கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
உடனே, அங்கு வந்த கால்நடை மருத்துவர் உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தபோது அனைத்து ஆடுகளும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் ராஜா தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று தண்ணீர் கொடுத்தது தெரியவந்தது. தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள் கடும் வெயிலில் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று பிறகு அதிக அளவில் தண்ணீர் கொடுத்ததால் அந்த ஆடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்தி ருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
இருப்பினும், 30 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரியவெங்காயப்பள்ளியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago