பல்கலைக் கழக அளவிலான சர்வதேச செஸ் போட்டியில் - ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு வெள்ளிப்பதக்கம் :

By செய்திப்பிரிவு

பல்கலைக்கழங்களுக்கு இடையேயான சர்வதேச செஸ் போட்டியில், ஈரோடு கிராண்ட் மாஸ்டர் ப.இனியன், வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

ஈரோட்டைச் சேர்ந்த ப.இனியன் (18), கடந்த ஐந்து ஆண்டுகளாக அபுதாபி, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின், பிரான்ஸ், அண்டோரா, மலேசியா, துருக்கி, ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் நடந்த செஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான, முதலாவது உலக ஆன்லைன் பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தது. இதில், 84 நாடுகளைச் சார்ந்த 960 வீரர்கள் பங்கேற்றனர். நான்கு குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட்ட போட்டியில், ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இரண்டு இடங் களைப் பிடித்த 8 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இப்போட்டியில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் பங்கேற்றார். அமெரிக்கா, உக்ரைன் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட வீரர்களைத் தோற்கடித்து, 8.5 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடந்த 18-ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியனுடன், ரஷ்யா, அர்மேனியா, சீனா நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் விளையாடினர்.

இதில், சீன கிராண்ட் மாஸ்டர் ஜூ யின்ங்லுன் இடம் முதலாவது சுற்றில் தோல்வி அடைந்து இனியன் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தார்.அதன் பின்பு நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஐந்து வெற்றி, ஒரு போட்டியில் சமன் செய்து 5.5 புள்ளிகளை பெற்றார். இந்த சாம்பியன்ஷிப் முடிவில் 5.5 புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் இனியன் முதலிடத்தை சமன் செய்தார். ஆனால் டை பிரேக்கர் முறையில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்