வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - தேர்தல் களத்தில் 130 வேட்பாளர்கள் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 71 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 59 பேர் என மொத்தம் 130 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. கடந்த 20-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டுள்ள குறைபாடுள்ள மனுக்கள், கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சின்னங்கள் ஒதுக்கீடு

இந்நிலையில், வேட்பு மனுக்கள் திரும்பப்பெற நேற்று கடைசி நாள். அதன்படி, சுயேட்சை வேட்பாளர்கள் பலர் மனுக்களை திரும்பப் பெற்ற நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது. தேசிய கட்சி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வரிசையில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு விருப்பம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 71 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேலூரில் 17 பேர், காட்பாடியில் 15 பேர், அணைக்கட்டில் 14 பேர், கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 10 பேர், குடியாத்தம் (தனி) தொகுதியில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அரக்கோணம் (தனி) தொகுதியில் 13 பேர், சோளிங்கரில் 20 பேர், ராணிப்பேட்டையில் 14 பேர், ஆற்காட்டில் 12 பேர் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், சோளிங்கர் மற்றும் வேலூர் தொகுதியில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளனர். ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 15 வேட்பாளர்கள் பெயருடன் ஒரு நோட்டாவுக்கு வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்