ரயில்வே கேட்டை தற்காலிகமாக திறக்கக்கோரி பரமக்குடி அருகே 6 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

By செய்திப்பிரிவு

பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் வரை ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் 6 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடி வழியாக மதுரை -ராமேசுவரம் ரயில் பாதை அமைந்துள்ளது. இதன் அருகே மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ் சாலையும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையும், இக்கிராமத்தையும் இணைக்கும் இடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்வே கேட்டை கமுதக்குடி, இலந்தைகுளம், பீயனேந்தல், ஆதியனேந்தல், சுந்தனேந்தல், நண்டுபட்டி ஆகிய 6 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக்கப்பட்டு இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டதால், 1.10.2019 அன்று எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், ரயில்வே நிர்வாகம் கேட்டை மூடிவிட்டது. இதனால் இக்கிராம மக்கள் மேம்பாலத்தை 4.5 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டி யுள்ளது. அதனையடுத்து கிராம மக்கள் ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் மாற்று ஏற்படாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை ரயில்வே கேட்டை திறந்து விட வேண்டும் எனவும் பலமுறை முறையிட்டனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால் கிராம மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கிராம மக்கள் சார்பாக உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு, இவ்வழக்கில் உடனடியாக சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சுரங்கப்பாதை அமைக்கும் வரை தற்காலிகமாக ரயில்வே கேட்டை திறக்க வேண் டும். இல்லையெனில், தேர்தலைப் புறக்கணிப்போம் என ஆறு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்