வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.7.48 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல்பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் அடுத்த முத்தரசிக்குப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, அந்த வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூல அலுவலரிடம் ஒப்படைத் தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.19 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல, நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அவ் வழியாக வந்த கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.47 லட்சம் பறிமுதல் செய்து நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோரணம்பதி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (48) என்பவரின் காரை நிறத்தி சோதனையிட்டதில் அவரிடம் ரூ.1.02 லட்சம் இருப்பதும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago