வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவில்லை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, அரியலூரை அடுத்த வி.கைகாட்டியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: கனிம சுரங்கங்கள் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை சந்திக்கும் மக்களுக்கும், நிலத்தை சிமென்ட் ஆலைகளுக்கு கொடுத்து விட்டு வேலையில்லாமல் திண்டாடும் மக்களுக்கும் நீதிமன்றத்தில் வாதாடி வருபவர்தான் வேட்பாளர் சின்னப்பா. அவர் வெற்றிபெற்றால் தங்களுக்கு உரிய தீர்வை நிச்சயம் பெற்று தருவார்.

ராஜேந்திரசோழன், வீரமாமுனிவர், தமிழுக்காக திருச்சியில் உயிரை நீத்த சின்னச்சாமி ஆகியோர் வாழ்ந்த இந்த மண்ணில் தற்போது நடைபெற்று வருவது ஊழல் ஆட்சி.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 5,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 90 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளை ஆளும் கட்சி இதுவரை எடுக்கவில்லை. ஊழல் செய்யும் அதிமுக அரசை வெளியேற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து, விக்கிரமங்கலம், சுண்டக்குடி, ஏலாக்குறிச்சி, வெங்கனூர் மற்றும் அரியலூர் அண்ணா சிலை அருகிலும் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்