கலசப்பாக்கத்தில் காய்கறி சந்தை அமைத்து தரப்படும் : அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் உறுதி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி ஆணைவாடி, கரையாம்பாடி, சின்னகாலூர், பெரியகாலூர், பத்தியவாடி ஆகிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகளின் நலன் கருதி செய்யாற்றின் குறுக்கே ஆணைவாடி பகுதியில் ரூபாய் 7.5 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஆணைவாடியில் பாதியில் நின்ற தொங்கு பாலம் பணிக்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுத்துள்ளேன். கலசப் பாக்கத்தின் மையப் பகுதியில் இடம் தேர்வு செய்து நிரந்தரமாக காய்கறி சந்தை அமைத்துத் தரப்படும். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த வேளாண் விரிவாக்க மையம், தற்போது தென்பள்ளிப்பட்டில் செயல்படுகிறது.

அந்த இடத்துக்கு விவசாயிகள் வந்து செல்லும் வகையில், அரசு பேருந்துகள் அனைத்தையும் நின்று செல்ல பாடுபடுவேன். மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்த அளவே இருந்த வீட்டு வாடகை படியை உயர்த்தி பெற்று தந்துள்ளேன்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட் பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் மாணவர் களால் பாடம் கற்பிக்கப்படுகிறது. என்னை வெற்றி பெறச் செய்தால் இன்னும் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்” என்றார். அப்போது, அதிமுக, பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்