கடலூரில் ஏப்ரல் 10-ல் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 10-ம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், (சமரசத்திற்கு உட்பட்ட) பண மோசடி, வாகன விபத்து, காசோலை மற்றும் வங்கி வழக்கு போன்ற அனைத்து வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம். எனவே பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவர்களுடைய வழக்கறிஞர்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கிக்கடன் வழக்குகளும் மற்றும் நேரடியாக மனுக்கள் கொடுத்தும் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளன்று சமரசம் பேசி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.
இதுபோல் சிதம்பரம், விருத்தாசலம் ,பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும். பொதுமக்களும் வழக்காடிகளும் அந்தந்த நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.
ஏப்ரல் 10-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதையொட்டி கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் அனைத்து வட்ட சட்டப்பணிகள் குழுவிலும் தினமும் சிறப்பு மக்கள் நீதி மன்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை பொதுமக்களும் வழக்காடிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது குறித்து 04142 212660 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கோவிந்தராஜன் திலகவதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago