தமிழகத்திலே சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 3,500 உள் நோயாளிகள், 10 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை. அதனால், ஆங்காங்கே கிடைக்கிற இடங்களில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற பணியாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
மருத்துவமனைக்கு உள்ளேயே இப்படி ஆயிரம் பிரச்சனைகள் உள்ளநிலையில் மருத்துவமனை நுழைவாயிலில் எந்த வாகனமும் உள்ளேயும், வெளியேயும் வந்து செல்ல முடியாதபடி ஆட்டோ டிரைவர்கள் அட்டகாசம் செய்கின்றனர். அவர்கள் ஆட்டோக்களை நுழைவாயில் முன் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்திக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வருவோரையும், போவோரையும் கூவிக் கூவி அழைப்பதால், மருத்துவமனையில் இருந்து உள்ளேயும், வெளியேயும் வாகனங்களில் வருவோர் நுழைவாயில் வழியாக வந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மீது ஆட்டோ டிரைவர்கள் மோதி விபத்துகளையும் ஏற்படுத்துகின்றனர்.
தற்போது மருத்துவமனையில் ரூ.250 கோடியில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் டீன், மருத்துவர்கள், பணியாளர்கள் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய மருத்துவமனையின் முதல் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து வாகனங்களுமே தற்போது மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் ஆட்டோ டிரைவர்கள், காலை முதல் இரவு வரை மருத்துவமனை நுழைவாயில் முன் பயணிகளை ஏற்றுவதற்காக நகராமல் வரிசை கட்டி நிற்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்களும், நோயாளிகளின் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற பணியாளர்களும் நுழைவு வாயில் வழியாக எளிதாக வந்து செல்ல முடியவில்லை.
//இன்சர்ட் பாக்ஸ்//
வேடிக்கை பார்க்கும் போலீசார்
ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசத்தையும், அவர்கள் விதிமீறல்களையும் போலீசார் கண்டுகொள்வதில்லை. ஆட்டோக்களில் மூவருக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற கண்டிப்பான விதிமுறையுள்ளது. ஆனால் அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, மாட்டுத்தாவணி பஸ் நிலைய சாலைகளில் ஆட்டோ டிரைவர்கள், தங்கள் இருக்கையில் ஒருவர், வலது, இடது புற கம்பிகளில் தலா 2 பேர், மேற்புற இருக்கையில் மூவர், கீழ் இருக்கையில் மூவர் என 10 பேர் வரை ஆட்டோக்களில் ஏற்றிக் கொண்டு பறக்கின்றனர். அவர்கள் மீது மட்டும் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் அவர்கள் தற்போது மருத்துவமனை முன்பும் தங்கள் அட்டகாசத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்கள் மருத்துமனை சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், இதர பணியாளர்களை தினமும் தொந்தரவு செய்து மன உளைச்சல் ஏற்படுத்துவதோடு வாகனங்கள் மீது பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றனர். மாவட்ட போக்குவரத்து போலீஸார் உயர் அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவர்களின் விதிமுறை மீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும். அல்லது போலீசார் காலை முதல் சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago