கரோனாவை வைத்து அதிமுக அரசு கொள்ளையடித்ததாக புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எஸ்.ரகுபதி (திருமயம்), சிவ.வீ.மெய்யநாதன் (ஆலங்குடி), எம்.பழனியப்பன் விராலிமலை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை) மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி) ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:
முதல்வர் பழனிசாமிபோல அல்லாமல் 14 வயதில் இருந்து படிப்படியாக உயர்ந்து தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளேன். மக்களுக்கு நல்வாழ்வைக் கொடுக்க வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், கேடு விளைவிக்கும் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்தார். கரோனாவை வைத்து கொள்ளை அடித்தது அதிமுக அரசு.
எம்.பி தேர்தலின்போது திமுகவினர் வாக்காளர்களுக்கு போலியான வாக்குறுதிகளைக் கூறி இனிப்பு மிட்டாய் கொடுத்துவிட்டதாக கூறினார்களே. தற்போது, அதிமுகவினர் வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை என்ன அல்வாவா?.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுகவினர் நாடகம் நடத்துகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி தமிழகத்தில் பலமுறை விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது நிதி இல்லை என்று அதிமுக அரசு கூறியது. பின்னர், விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் கடனை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியது அதிமுக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறியதும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அதையும் சேர்த்துள்ளனர். ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளின் வேதனை தெரியாமல் போனது?. திமுக தேர்தல் அறிக்கையின் நகல்தான் அதிமுக தேர்தல் அறிக்கை. விலைவாசி உயர்வைத் தடுக்க அதிமுக அரசு முயற்சி எடுத்ததில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago