திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட நேற்று வரை 54 வேட் பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ம் தேதி தொடங்கியது. மார்ச் 19-ம் தேதி (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை மார்ச் 20-ம் தேதியும், மார்ச் 22-ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப் பம் தெரிவித்து இன்று (நேற்று) வரை 54 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மார்ச் 12-ம் தேதி திருப்பத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்த நிலையில், மார்ச் 15-ம் தேதி முதல் அதிமுக, திமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் முகமது நயீம் (65) கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தேர்தல் நடத்தும் அலுவலரான காயத்ரி சுப்பிரமணியிடம் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
அதேபோல், ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ராஜா (37) என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜோலார்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பாபு (50) என்பவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவா (46) என்பவரும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சிவக்குமார் (42) என்பவரும், சுயேட்சை வேட் பாளர் வீரமணி (43) என்பவர் உட்பட 5 பேர் தேர்தல் நடத்தும் அலுவலரான லட்சுமியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சாமான்ய மக்கள் நலக்கட்சி வேட்பாளர் ரோஸ்லீன் ஜீவா (49) என்பவரும், சுயேட்சை வேட்பாளர் பழனி (28) என்பவரும் தேர்தல் நடத்தும் அலுவலரான வந்தனாகர்க்கிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக கடந்த 12-ம் தேதி சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், மார்ச் 15-ம் தேதி 16 வேட்பாளர்களும், மார்ச் 16-ம் தேதி 4 வேட்பாளர்களும், மார்ச் 17-ம் தேதி 24 வேட்பாளர்களும், மார்ச் 18-ம் தேதி (நேற்று) 9 வேட்பாளர்கள் என இதுவரை 54 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், ஜோலார்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் தேவராஜ் உட்பட மேலும் சிலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago