சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதேபோல், அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகா சிவராத்திரி, மயானக் கொள்ளை மற்றும் ஊஞ்சல் தாலாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதும், திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, நிலங்களில் விளைந்த நவ தாணியங்களை அம்மனுக்கு பக்தர்கள் தூவி வணங்கினர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து விரதத்தை நிறைவு செய்தனர். அதன்பிறகு அம்மன் தாலாட்டு மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. மாசித் திருவிழா நிறைவாக, அம்மனுக்கு திருக்கல்யாணம், தீர்த்தவாரி மற்றும் தெப்ப உற்சவம் ஆகியவை வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago