கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டனின் தந்தையுமான முருகேசனை ராம நாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் து. குப்புராம், மாவட்டத் தலைவர் கே. முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஆகவே ராமநாதபுரத்தில் பாஜக வேட் பாளர் வெற்றிபெறுவார். திமுகவினரோ பாற்கடலைக் கடைந்து அமுதம் பருக நினைப்பது போல லாபமடைய நினைக்கின்றனர், அது நடக்காது. சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் பார்க்க நினைத்ததை, ராமநாதபுரம் வேட்பாளர் குப்புராம் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதை மக்கள் அறிவர்.
தமிழக மீனவர் பிரச்சினையில் கச்சத்தீவை மீண்டும் மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கச்சத்தீவு பிரச்சினை சர்வதேசப் பிரச்சினை அல்ல. சீனா இலங்கையுடன் நட்புறவு கொண்டிருந்தாலும், இந்தியாதான் இலங்கைக்கு அண்டை நட்பு நாடு. இலங்கை அரசுடன் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திரும்ப பெறப்பட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஆழ்கடல் மீன்பிடித் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
பாஜக மாவட்ட பொதுச்செயலர் குமார், போகலூர் ஒன்றியச் செயலர் கதிரவன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago