திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியர் வே.சாந்தா, எஸ்பி கயல்விழி ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆட்சியர் கூறியது: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி காலை 7 மணி அளவில் தொடங்குகிறது. விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர் அன்று காலை 5 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது.
ஆழித் தேரோட்ட திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வர்த்தக நிறுவனத்தினர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத் துறை மூலம் 4 இடங்களில் நிலையான மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். ஒரு 108 ஆம்புலன்ஸ், 2 மருத்துவக் குழுக்கள் தேரை பின்தொடர ஏற்பாடு செய்யப்படும்.
திருவாரூர் நகராட்சியின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்றுநோய்கள் பரவா வண்ணம் சுண்ணாம்பு தெளித்து, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். 10 தீயணைப்பு வீரர்களை கொண்ட 2 கமாண்டோக்குழு அமைக்கப்படும். பாதுகாப்பு பணியில் 15 அலுவலர்களும், 70 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், கோட்டாட்சியர் பாலசந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago