ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது : குடவாசலில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி கருத்து

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குடவாசலில் அமைச்சர் ஆர்.காமராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியது:

இப்பகுதி மக்கள் அனைவரின் பிரார்த்தனையின் பலனாக கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு, மறுபிறவி எடுத்து வந்துள்ளார் அமைச்சர் ஆர்.காமராஜ்.

மக்கள் பணி செய்யும் எண்ணம் என்பது அடிப்படையிலேயே சிலருக்குத் தான் வரும். அத்தகைய சேவை மனப்பான்மை கொண்டவரான அமைச்சர் ஆர்.காமராஜ் இங்கு வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்ய வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் கனவிலேயே இருக்கிறார். அவரது கனவு பலிக்காது. நான் ஊர் ஊராகச் சென்று மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து இதைச் சொல்கிறேன்.

2019 மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதை ஸ்டாலின் மறந்துவிட்டார். மாறாக இந்த ஆட்சியை குறை கூறுகிறார். ஆட்சியை கவிழ்ப்பதற்கும் முயற்சித்தார். ஸ்டாலின் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் அதிமுக தொண்டர்களின் துணையோடு தவிடு பொடியாக்கப்பட்டன.

எனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் வாழும் என ஜெயலலிதா கூறிச் சென்றார். அந்த வாக்கு பலிக்கும். அந்த வார்த்தையை இந்த தேர்தல் மூலமாக மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து சிறந்த செயல்பாட்டுக்கான பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பயிர்க் கடன், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், திமுக ஆட்சியில் எதைச் செய்தோம் எனக் கூறி வாக்கு கேட்க முடியாத நிலையில், அதிமுகவையும் என்னையும் குறை கூறுவதை மட்டுமே செய்து வருகிறார். அவருடைய எண்ணம் நிறைவேறாது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தவும், அதிமுக தலைமையிலான நல்லாட்சி தொடரவும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, மன்னார்குடியில் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்