வேலூர் விஐடி பல்கலையில் காணொலி காட்சி மூலம் சர்வதேச பெண்கள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘உலக மக்கள் தொகையில் 49.6 சதவீதம் பேர் பெண்கள். 194 நாடுகளில் 22 நாடுகளில் பெண்கள் அரசின் தலைமை பதவியை வகிக்கின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை யில் 48.4 சதவீதம் பெண்கள் உள்ளனர். உலகிலேயே இலங்கையில் தான் பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கல்வியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் பெண்கள் முன்னேறுவார்கள். அதேபோல, பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்’’ என்றார்.
இதையடுத்து, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி நிர்மலா சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்திலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண்கள் சாதிப்பதை எந்த ஒரு தடையாலும் தடுக்க முடியாது.
உலகை அச்சுறுத்திய கரோனா காலத்தில் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் தான் முன்னின்று கொடிய நோயை எதிர்த்து போராடினர். பெண்களை பாது காக்கும் சட்டங்களை பெண்கள் தெரிந்துக்கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதை பெண்கள் தெரிந்துக் கொண்டு சமுதாயத்தில் உரிமையோடும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், விஐடி பதிவாளர் சத்தியநாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமித் மகேந்திரகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago