லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் :

By செய்திப்பிரிவு

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கல் குவாரியில் வெடி வைத்ததில், அப்பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் நேற்று கல்குவாரிக்குச் சொந்தமான லாரிகளை சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "கல் குவாரிகளில் அதிக திறன் கொண்ட வெடிகளைப் பயன்படுத்துவதால் எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை" என்றனர்.

பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்