விவசாயிகளுக்காக முதல் குரல் கொடுப்பது அதிமுக அரசு தான் : தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அத்தொகுதி அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தத்தை ஆதரித்து நேற்று மாலை தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: கருணாநிதி குடும்பத்தினர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்து மனஉளைச்சலை ஏற்படுத்தி, அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தார்கள்.

கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்காக ரூ.2,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடைமடை வரை தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவீதம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு. 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரணம் அளித்துள்ளோம். வறட்சி இடுபொருள் நிவாரணத்தை விவசாயிகளுக்கு அளித்துள்ளோம். விவசாயிகளுக்கு ரூ.9,300 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீடு பெற்று தந்துள்ளோம்.

விவசாயிகளுக்கு குறை என்றால் முதல் குரல் கொடுப்பது அதிமுக அரசுதான் என்றார்.

இதைத்தொடர்ந்து, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முதல்வர் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புளிச்சங்காடு கைகாட்டியில் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலை ஆதரித்து தமிழக முதல்வர் பேசியது:

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் பாதுகாக்கப்பட்டது.

காவிரி நதிநீர் பிரச்சினைக்கு சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சி னைகளை தீர்க்கின்ற ஒரே அரசாக அதிமுக அரசு உள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தை எந்த காலத்திலும் வராத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது திமுக.

ஸ்டாலின் திமுக ஆட்சியில் செய்ததை ஒன்றைக்கூட சொல்வதில்லை. ஆனால், அதிமுக அரசை மட்டும் குறைகூறி வருகிறார். மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது திமுக அரசு என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்