திருப்பூர் மாவட்டத்தில் - அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று அதிமுக, திமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அவிநாசி (தனி) தொகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், பல்லடம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் தெற்கு தொகுதியில் திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுகவை சேர்ந்தவருமான க.செல்வராஜ் உள்ளிட்டோர் நேற்று மனு தாக்கல் செய்தார்.

பல்லடம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மனு தாக்கலுக்கு முன்பாக மாட்டு வண்டியில் பயணம் செய்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். காங்கயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.எஸ். ராமலிங்கம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

தாராபுரம் தொகுதியில் - 2, காங்கயம் - 2, அவிநாசி - 2, திருப்பூர் வடக்கு - 1, திருப்பூர் தெற்கு - 2, பல்லடம் - 6, மடத்துக்குளம் - 6 என மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்தனர்.

சொத்து மதிப்பு

அவிநாசி தொகுதியில் மனு தாக்கல் செய்த சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தனது பெயரில் அசையும் சொத்து ரூ.30 லட்சம், அசையா சொத்து ரூ.4.5 லட்சம், மனைவி கலைச்செல்வி பெயரில் அசையும் சொத்து ரூ.1.54 கோடி, அசையா சொத்து ரூ.3.6 கோடி எனவும், குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை எனவும் குறி்ப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனக்கு அசையும் மற்றும் அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 84 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல, மாநகராட்சி முன்னாள் மேயர் (திமுக) க.செல்வராஜ், தனக்கு அசையும் சொத்து ரூ.28 லட்சம் எனவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்