திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளில் - பாமக, அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதி களில் அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன. திருப்பத்தூர் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக மாநில துணை பொதுச்செயலாள ரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ராஜா போட்டியிடுகிறார். திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பாமக வேட்பாளர் டி.கே.ராஜா திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான வந்தனாகர்க்கிடம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றுவேட்பாளராக பாமக மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா மனுத்தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பாமக வேட்பாளர் டி.கே.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்த 2 முறை இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கடந்த2001-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவை தொகுதியில் திருப்பத் தூரை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என குரல் கொடுத்தேன். அதன் விளைவு 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் தனி மாவட்டமாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் திருப்பத்தூர் தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறேன்’’ என்றார்.

வாணியம்பாடி தொகுதி

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் போட்டி யிடுகிறார். இதையொட்டி, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் செந்தில்குமார் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வாணியம்பாடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி சுப்பிரமணியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக பெருமாள் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், நகரச்செயலாளர் சதாசிவம், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர் தொகுதி

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் நஜர்முகமது போட்டியிடுகிறார். இவர், நேற்று காலை தனது கூட்டணி கட்சியினருடன் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அதிமுக நிர்வாகி ஜோதிராமலிங்கராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

அதேபோல, நாம் தமிழர் கட்சி ஆம்பூர் தொகுதி வேட்பாளர் மெகருன்னிசாவும் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று தாக்கல் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்