இயற்கை உரங்களை பயன்படுத்தி - எலுமிச்சை சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டும் விவசாயி :

By செய்திப்பிரிவு

ராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி இயற்கை உரங்களை பயன்படுத்தி எலுமிச்சை சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.

பருவ மழை பொய்த்துப் போதல், பருவம் தப்பிப் பெய்யும் மழை ஆகியவற்றால் நாளுக்குநாள் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இதை சமாளிக்க முடியாத பலர் விவசாயத் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலை நாடிச் செல்லும் நிலை உள்ளது. எனினும், கால சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விவசாயிகள் சிலர் காலத்திற்கேற்ப பயிர் சாகுபடியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொலக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.சிவக்குமார் என்பவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் முற்றிலும் இயற்கையான முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறாா். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

எங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து வந்தோம். வறட்சி காரணமாக மரங்கள் மடிந்தன. அதனால், அவற்றை அகற்றி விட்டு வேளாண் துறையினரின் ஆலோசனையின்பேரில் கடந்த 2015-ம் ஆண்டு 3 ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்தேன். மொத்தம் 400 மரங்கள் நடப்பட்டன. எனினும், செயற்கை உரங்களை பயன்படுத்தியதால் போதிய மகசூல் கிடைக்கவில்லை.

எனவே, கடந்த 2018-ம் ஆண்டு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனையின்படி இயற்கை உரங்களை பயன்படுத்தத் தொடங்கினேன். நல்ல மகசூலும் கிடைக்கத் தொடங்கியது. எலுமிச்சை பழங்களை ஈக்களிடம் இருந்து பாதுகாக்க உரங்களை பயன்படுத்தாமல் கருவாட்டை பாட்டிலில் அடைத்து எலுமிச்சை மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ளது. கருவாடு வாசனைக்கு பாட்டிலுக்கு வரும் ஈக்கள் அதில் விழுந்து இறந்துவிடுகின்றன.

இதுபோல், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் எனது தோட்டத்தில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழத்தில் 30 முதல் 40 மில்லி அளவுக்கு சாறு கிடைக்கும். ஒரு மரத்தில் ஆண்டுக்கு 50 முதல் 60 கிலோ என ரூ.5 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடிகிறது.

இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் ஆண்டு முழுக்க எலுமிச்சை பழம் சாகுபடி செய்ய முடிகிறது. நடவு செய்த ஒன்றரை ஆண்டு முதல் மரத்தில் மகசூல் கிடைக்கும். நமது பராமரிப்பைப் பொறுத்து 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக மகசூல் பெற இயலும். தற்போது கூடுதலாக 2 ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளேன். மற்ற விவசாயிகளுக்கும் இதுகுறித்து விளக்கம் அளித்து வருகிறேன், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்