ஊட்டச்சத்து, ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்க - குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் நாளை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் இரு கட்டங்களாக 1 முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 95 ஆயிரத்து 431 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் நாளை (15-ம் தேதி) முதல் 20-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இரு கட்டங்களாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட நபர்களுக்கு 29-ம் தேதி வழங்கப்படுகிறது.

இதன்படி 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 95 ஆயிரத்து 431 குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயது வரை 1,53,830 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் மூலமாக வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்