ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அகில இந்திய விவசாயிகள் நல்வாழ்வு சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் கே.எஸ்.கோவணம் தங்கவேல், விவசாய ஏர்க்கலப்பையுடன் வந்து, தனது வேட்புமனுவை மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விவசாயிகள் அதிகம் வசிக்கும் மொடக்குறிச்சி தொகுதியை, விவசாயிகளுக்கான தனித் தொகுதியாக அறிவித்திட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்தத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன், என்றார்.
இவர் ஏற்கெனவே மொடக்குறிச்சி தொகுதியில் மூன்று முறையும், ஈரோடு, சேலம் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago