நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மூன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் என தலா 4 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன்படி 9,836 அரசு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளார்கள் என்பதை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்தார். பணியாளரின் விவரங்கள், அவரின் சொந்த ஊர் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி, அவர் தற்போது பணிபுரியும் அலுவலகம் உள்ள தொகுதி ஆகிய விவரங்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.
இவர்களுக்கான பணியாணை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதனிடையே வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாளை (14-ம் தேதி) நடைபெறுகிறது. இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர். தேர்தல் பிரிவு வட்டாட்சியர் திருமுருகன், தேர்தல் பிரிவு கணினி பிரிவு பொறியாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago