மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் - 26 இடங்களில் அதிமுக- திமுக நேரடி போட்டி : திமுகவில் 14 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. திமுகவில் 14 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். 2 எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2 எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு கே.என்.நேரு, திருவெறும்பூர் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சவுந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின்குமார் ஆகிய 4 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரங்கத்தில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பழனியாண்டிக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (கிறிஸ்தவநல்லெண்ண இயக்கம்), முசிறி காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் ஆகியோர் முதன்முறையாக போட்டியிடுகின்றனர். மணப்பாறை தொகுதி திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு(திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டி) ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றன.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் கோவி.செழியன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன், கும்பகோணம் சாக்கோட்டை அன்பழகன், திருவையாறு துரை.சந்திரசேகரன் ஆகிய 5 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேராவூரணியில் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அசோக்குமார் போட்டியிடுகிறார்.

பட்டுக்கோட்டையில் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். பாபநாசம் தொகுதி திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு (உதயசூரியன் சின்னத்தில் போட்டி) ஒதுக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகின்றன.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா ஆகிய இரு எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். நன்னிலத்தில் ஜோதிராமன் முதன்முறையாக போட்டியிடுகிறார். திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதி திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய 3 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடியாக மோதுகின்றன.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எஸ்.கே.வேதரத்தினம், பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி ஆகிய தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகின்றன.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் எஸ்.ரகுபதி, ஆலங்குடி வீ.மெய்யநாதன் ஆகிய 2 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராலிமலையில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய எம்.பழனியப்பனும், புதுக்கோட்டை தொகுதியில் முத்துராஜா புதிதாகவும் களம் காணுகின்றனர். திமுக கூட்டணியில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமயம், ஆலங்குடி, விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகின்றன.

கரூர்

கரூர் மாவட்டத்தில் 2019 இடைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற வி.செந்தில்பாலாஜி இந்த முறை கரூரில் போட்டியிடுகிறார். குளித்தலை தொகுதியில் 2011-ம் ஆண்டு வெற்றி பெற்ற இரா.மாணிக்கம் தற்போது போட்டியிடுகிறார். கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி என்.ஆர்.இளங்கோ ஆகியோர் புதிதாக களம் காணுகின்றனர். கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 3 தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகின்றன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் பிரபாகரன், குன்னம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இரு தொகுதிகளிலுமே திமுக- அதிமுக நேரடியாக மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்