லால்குடி தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியன், தற்போது 4-வது முறையாக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1951-ம் ஆண்டு ராஜாசிதம்பரம் (சுயேச்சை), 1957-ல் எஸ்.லாசர் (காங்கிரஸ்), 1962-ல் பி.தர்மலிங்கம் (திமுக), 1967-ல் டி.நடராசன் (திமுக), 1971-ல் வி.என்.முத்தமிழ்செல்வன் (1971), 1977-ல் கே.என்.சண்முகம் (அதிமுக), 1980-ல் அன்பில் தர்மலிங்கம் (திமுக), 1984-ல் கே.வெங்கடாச்சலம் (காங்கிரஸ்), 1989-ல் கே.என்.நேரு (திமுக), 1991-ல் ஜே.லோகாம்பாள் (காங்கிரஸ்), 1996-ல் கே.என்.நேரு (திமுக), 2001-ல் எம்.எஸ்.பாலன் (அதிமுக) வெற்றி பெற்றனர். இவர்களில் அன்பில் தர்மலிங்கம், கே.என்.நேரு ஆகியோர் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர்.
4-வது முறையாக போட்டி
அதற்குப்பின் நடைபெற்ற 2006, 2011, 2016 ஆகிய 3 தேர்தல்களிலும் இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எ.சவுந்தரபாண்டியன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் லால்குடி தொகுதியில் சவுந்தரபாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்திலுள்ள 9 மாவட்டங்களில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று, 4-வது முறையாக போட்டியிடும் ஒரே திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சவுந்தரபாண்டியன் தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
நிச்சயம் வெற்றி பெறுவேன்
இதுகுறித்து திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியனிடம் கேட்டபோது, ‘‘தொகுதியிலுள்ள அனைத்து மக்களுடனும் நெருங்கிப் பழகி, அவர்களில் ஒருவராக இருந்து வருகிறேன். 4-வது முறையாக இங்கு திமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயம் இம்முறையும் வெற்றி பெறுவேன்’’ என்றார்.ஏற்கெனவே 2 முறை அதிமுகவையும், ஒரு முறை தேமுதிகவையும் தோற்கடித்த சவுந்தரபாண்டியன், இந்த முறை தமாகா வேட்பாளரை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago