திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் - உரிய ஆவணமில்லாத ரூ.4.78 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.4.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் அருகே உள்ள எட்டியலூர் பகுதியில் வட்டாட்சியர் ராஜ.ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்தி என்பவர், வங்கியில் அடகுவைத்திருந்த நகையை மீட்பதற்காக எடுத்துச் சென்ற ரூ.2.15 லட்சத்துக்கு உரிய ஆவணமில்லாதது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோட்டாட்சியர் பாலச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வல்லத்திராகோட்டையில் ஜேம்ஸ் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனை செய்தனர். அப்போது, திருச்சிக்கு பழம் வாங்குவதற்காக லாரியில் சென்ற அறந்தாங்கியைச் சேர்ந்த கே.கண்ணையா(61) என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட தச்சங்குறிச்சியில் அலெக்ஸாண்டர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சிக்கு பழம் வாங்குவதற்காக லாரியில் சென்ற தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த எம்.முகமதுல்லாவிடம் இருந்து உரிய ஆவணமில்லாத ரூ.1.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் நாகை- நாகூர் பிரதான சாலையில் நேற்று அதிகாலை பறக்கும் படை வட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையிலிருந்து நாகை வந்த தனியார் பேருந்தை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில், மொய்தீன் என்பவர் உரிய ஆவணங்களின்றி 7 மூட்டைகளில் சேலைகளைக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்தச் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர், உரிய ஆவணங்களை கொண்டு வந்து, காட்டியதையடுத்து, சேலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்