திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், வாக்குச்சாவடிகள் எண்ணிக் கைக்கு ஏற்ப, கூடுதலாக 20 சதவீத மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 31 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3,465 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,465 கட்டுப் பாட்டு இயந்திரங்கள், 3,783 வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் என மொத்தம் 10,713 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் அனைத்தும் கணினி குலுக்கல் முறையில் பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் இருந்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அனுப்பும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன்பிறகு, காவல்துறை பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் ‘சீல்' வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago