தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஈரோட்டில் மஞ்சள் மற்றும் ஜவுளி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்ரூ.1 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம், ஜவுளி வர்த்தகம், மாட்டுச்சந்தை போன்றவற்றில் ஈடுபடும் வியாபாரிகள் ரொக்கப் பரிவர்த்தனையையே விரும்பி வருகின்றனர். ஈரோட்டில் நான்கு இடங்களில் நடக்கும் மஞ்சள் ஏலத்தில், விவசாயிகள் விற்பனை செய்யும் மஞ்சளுக்கான தொகை, நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. ஆனால், மசாலா தயாரிப்பு உள்ளிட்டவற்றிற்காக மஞ்சள் கொள்முதல் செய்பவர்கள் ரொக்கம் செலுத்தியே வாங்கிச் செல்கின்றனர். குடிசைத் தொழிலாகவும், சிறு தொழில்முனைவோராகவும் உள்ளோர் ரொக்கம் கொடுத்து மஞ்சள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் வாகன சோதனை மேற்கொள்கின்றன. சோதனையில் தங்களது பணம் பறிமுதல் செய்யப்படும் என அச்சப்படும் சிறு மஞ்சள் வியாபரிகள், மஞ்சள் வணிகர்களுக்கு மட்டும் ரூ.1 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடக்கும் கனி ஜவுளிச்சந்தையில், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில வியாபாரிகள் ஜவுளிக் கொள்முதலுக்காக வருவது வழக்கம். தற்போது, மகாராஷ்டிரா, கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அம்மாநில வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதர மாநில வியாபாரிகள் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளும், ஜவுளிக்கொள்முதலுக்காக, ரூ.50 ஆயிரத்திற்கு மேல், ரொக்கம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த இரு வாரங்களாக ஜவுளி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மாடுகளை விற்பனை செய்வோருக்கு, மாட்டுச்சந்தை நிர்வாகம் சார்பில் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. மாடுகளை விற்பனை செய்து பணத்தினை எடுத்துச் செல்வோர், தேர்தல் பறக்கும்படையினரிடம் இந்த ரசீதினை ஆவணமாகக் காட்டலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago