திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவினரின் சான்றொப்பம் இல்லாமல் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசும் போது, ‘‘சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் வாக்குப்பதிவு நடைபெறும் வரை 24 மணி நேரமும் செயற்கைக்கோள் ஒளிப்பரப்பு மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களை (கேபிள் டிவி) ஊடக மையம் வாயிலாக தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை விளம்பரம் செய்ய முன் அனுமதிபெற வேண்டும் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவினர் களுக்கு விளம்பரம் தொடர்பான விவரங்களையும், விளம்பரம் தயாரிப்புக்கான செலவின தொகைக்கான பட்டியலை உரிய படிவத்துடன் ஒப்படைக்க வேண்டும். அவற்றை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை வழங்குவார்கள். ஆகவே, உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவினரின் சான்றொப்பம் இல்லாமல் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிப்பரப்பி னால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago