சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா தலைமை வகித்தார். ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் போட்டியை பார்வையிட்டா்.
இதில், 100 சதவீதம் வாக்களிப்பது, நேர்மையுடன் வாக்களிப்பது, வாக்களிக்கும் தினம், வாக்களிப்பதின் பெருமையை உணர்த்தும் வகையில் ஆள்காட்டி விரலில் மையிடப்படுவது, எனது வாக்கு எனது உரிமை என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டிருந்தன. இவற்றை ஆட்சியர் மெகராஜ் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.
நாளை மாரத்தான் போட்டி
மேலும், வலுவான ஜனநாயகம் அமைக்க 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியர் மெகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை (10-ம் தேதி) மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. நாமக்கல் பூங்கா சாலை முதல் மாவட்ட விளையாட்டு மைதானம் வரை போட்டி நடைபெறும். விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது. மாரத்தான் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ளலாம், என்றார்.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்டிஓ மு.கோட்டைக்குமார், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சி.ஆர். ராஜேஸ்கண்ணன், நாமக்கல் வட்டாட்சியர் ரா. தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago