‘நீலகிரி மாவட்டத்தில் 20,000 பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி’ :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 20,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பாலுசாமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலையில்லா கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 முதல் 59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், போலீஸார் ஆகியோர், அந்தந்த மையங்களில் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதற்காக, சென்னையில் இருந்து கோவிஷீல்டு, கோவக்சின் 17 ஆயிரம் தடுப்பு மருந்துகள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பாலுசாமி கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 46,843 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 8,374 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து 8,277 பேர் வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் மட்டுமே தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என சுமார் 20,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவர்களில், 5,620 பேர் பொதுமக்கள். மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவ மனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் போதுமான அளவில் கரோனா தடுப்பு மருந்து இருப்பு உள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்