நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவை தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல் தொடர்பாக வணிக வரித்துறை, வங்கியாளர்கள் மற்றும் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆகியோருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. எனவே வங்கிகளில் ரூ. 10 லட்சத்திற்கு மேற்பட்ட அனைத்து வகையிலும் மேற்கொள்ளக் கூடிய பரிவர்த்தனை, வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் சார்பாக வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்திற்கு மேல் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை நடவடிக்கை விவரங்களை கண்காணித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
வணிக வரித்துறை அலுவலர்கள், நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களில் தினந்தோறும் நடைபெறும் விற்பனையில் இயல்புக்கு மாறாக நடைபெறும் விற்பனைகளை கண்காணித்து தேர்தல் நடைமுறை விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதனை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும், என்றார்.
வணிகவரித்துறை உதவி ஆணையர் ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி. சதீஸ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொ. பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago