நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் நேற்று கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு மூலப்பொருளாக இருக்கும் நூல் விலை, கடந்த செப்டம்பர் முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடைசியாக மார்ச் 1 ம் தேதி கிலோவுக்கு ரூ.10 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் கிலோவுக்கு ரூ.62 அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தித்தொழில்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப் படுவதுடன் வருமான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழிலில் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. தொழில்துறையில் முதன்மை பங்கு வகிக்கும் ஜவுளித் தொழிலையும், அதை நம்பி வாழும் பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக, பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பருத்தியை கொள்முதல் செய்து, இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) மூலமாக நூற்பாலைகளுக்கு தொடர்ந்து நியாயமான விலையில் பஞ்சு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்