பல்லடம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், நான்கு சாலை சந்திப்பில் சிக்னலை ஒழுங்குபடுத்தி தாமதமில்லாமல் போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் மற்றும் மனுநீதி முகாம், பல்லடத்தில் உள்ள இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் (பொ) விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
பல்லடம் பேருந்து நிலையம் அருகே சில உணவங்களில் உணவு சமைக்கும் இடங்கள் சுகாதாரமில்லாமல் உள்ளது. தரமற்ற எடை குறைந்த புரோட்டா, சப்பாத்தி மற்றும் துரித வகை அசைவ உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், தொழிலாளர் துறை எடையளவு அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். பல்லடம் பேருந்து நிலையம் மற்றும் தினசரி சந்தை வியாபாரிகள் பலர் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இது பொதுமக்களுக்கு சிரமத்தை அளிக்கிறது. ஆகவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி விசாலமான நடைபாதையை ஏற்படுத்த நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் என்ஜிஆர் சாலை, மங்கலம், திருச்சி சாலைகளிலுள்ள வணிக வளாகங்கள், கடைகள் முன்பு, வாகனங்கள் நிறுத்தப்படுவதும், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பதும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு சாலை சந்திப்பிலுள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago