தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, கரோனா தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள சுமார் 8,500-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை, பார்த்திபனூர், பேரையூர், கீழத்தூவல், சாயல்குடி, சத்திரக்குடி, நயினார்கோவில், தேவிபட்டினம், ஆர்எஸ் மங்கலம், உச்சிப்புளி, உத்திரகோசமங்கை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்தல் அலுவலர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தற்போது வரை 8,120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் பக்க விளைவு ஏதும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது. என ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.இந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.பழனிக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி, சோ.கருணாநிதி, முருகம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago