பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் சான்றிதழ் எரிப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பார்வையற்ற கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைகாமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அலுவலகத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், கடந்த 17-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் ஒரு தரப்பினர் தினமும் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அலுவலகத்தில் நேற்று காலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

12 நாட்களாக..

போராட்டம் தொடர்பாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா கூறும்போது, “எங்களுடைய கோரிக்கைளை வலியுறுத்தி 12 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். 3 மாற்றுத் திறனாளிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் இதுவரை எங்களை அழைத்துக் கூட பேசவில்லை. உடனடியாக எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்