தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள் ளார். இது தொடர்பாக ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதி முறைகளை கடைபிடித்து தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
ஏதேனும் புகார் இருந்தால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 0424 - 2267672 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். நகரப்பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. கிராமங்களில் உரிய அனுமதி பெற்று விளம்பரம் வைக்கலாம். ஒரு சட்டப் பேரவை தொகுதி வேட்பாளர் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்து கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 2741 வாக்குச்சாவடி மையங்கள் 926 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 13 ஆயிரத்து 157 அரசு அலுவலர்களும், 193 மைக்ரோ அப்சர்வர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 80 வயதுக்கு மேல் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பினால் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தும் வாக்களிக்கலாம். மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 157 பேர், ராணுவ வீரர்கள் 298 பேர் உள்ளனர்.
கோபி, சத்தியமங்கலம் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கோபி கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படும். மற்ற 6 தொகுதிகளுக்கும் சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும்.
மாவட்டத்தில் 111 வாக்குச்சாவடி மையங்கள் மலைப் பகுதியில் அமைந்துள்ளன. 18 வாக்குச்சாவடி மையங்களில் இணையதள வசதி இல்லை. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வீடியோ மூலம் வாக்குகள் பதிவு கண்காணிப்பு செய்யப்படும். வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். வாக்காளர்கள் கையுறை அணிந்து தான் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். இதற்காக வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
பறக்கும் படையினர் தங்களது பணியை தொடங்கி விட்டனர். மாவட்டத்தில் 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. அது அவர்கள் விருப்பம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago