தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்க வசதி சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்க சேலம் ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் பேசியதாவது:

தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம்.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்தல் தொடர்பான புகார்களை சேலம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 0427-1950 என்ற தொலைபேசி எண் அல்லது 1800 4257 020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

நகரப்பகுதியில் அரசு கட்டிடங்கள், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்ய கட்டிட உரிமையாளர் அனுமதி அளித்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விளம்பரம் செய்யலாம்.

படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமதாரர்களும், அவர்களது படைக்கலன்களை தங்கள் பகுதி காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், தமது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களை அணுகி, படிவம் 6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதளம், Voter helpline என்ற அலைபேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பேசினார்.

திமுக வெளிநடப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக திமுக மாநகர அவைத்தலைவர் கலையமுதன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:

‘தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் எடப்பாடி தொகுதியில் அதிமுக-வினர் வீடு வீடாக புடவை, பரிசுப் பொருட்களை கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூட்டத்தில் தெரிவித்தோம். அதற்கு ஆட்சியர், “பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக” கூறினார். நடவடிக்கை குறித்து தெரிவிக்கவில்லை.

மேலும், சில கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் பதில் கூறுகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் சேலம் மாவட்டத்தில் தேர்தல் முறையாக நடைபெறாது என தெரிகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளி நடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்