அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி இணையவழியில் நடத்தப்படும்.
இதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31-ல் தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எல்.நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறையில் 1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களை (ஓவியம்-365, உடற்கல்வி-801, இசை-91, தையல்-341) நிரப்புவதற்கான போட்டித் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதிநடத்தப்படும்.
இது இணைய வழியில் நடைபெறும். இதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி நிறைவடையும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் அடிப்படை கல்வித் தகுதியுடன் தொழில்நுட்பத் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40. பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி,எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப்பெண். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான காலியிடங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி, தொழில்நுட்பத் தகுதிகள், தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்து அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எல்.நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago