திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடு ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி இல்லாமல் திருமண மண்டபங்களில் அன்னதானம், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சிவன் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருமண மண்டபங்களில் திருமணம் மற்றும் அரசியல் இல்லாத விழாக்கள் நடத்த அனுமதிக்கப்படும். தனி நபர்கள், அன்னதானம் வழங்கவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்ற பிறகே மண்டபங் களை வாடகைக்கு விட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி நகராட்சி, பேரூராட்சிகளில் பொது இடங்கள், தனியார் இடங்களில் விளம்பரம் செய்வது, போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுவது கூடாது. கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் அனுமதி பெற்று இடையூறு இல்லாமல் விளம்பரம் செய்யலாம். காவல் துறையால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும்’’ என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் என 4 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, (04174-234488/7598000418), ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் கே.விஜயன் (04174-244255/9443203564), ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லட்சுமி (04179-242499/9842862424), திருப்பத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சார் ஆட்சியர் வந்தனா கார்க் (04179-220088/9445000418) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்