அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால் அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதால், பயணிகள் அவதிப்பட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் 1.30 லட்சம் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதனால் பெரும்பாலான பணிமனைகளில் இருந்து முழு அளவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட இதர சங்கத்தினர் மற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அவற்றில் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் அதிக அளவிலான மக்கள் பயணம் செய்தனர். மின்சார ரயில் சேவை இல்லாத பகுதி மக்கள் ஆட்டோக்கள், கால்டாக்சிகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவில் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் வரையில் அரசு அறிவித்த ரூ.1,000 இடைக்கால நிவாரணத் தொகையை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார். ஆனால் தொழிற்சங்க நிர்வாகிகள், “இந்த இடைக்கால நிவாரணத் தொகை போதாது. கூடுதலாக அறிவிக்க வேண்டும். 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதியை கணக்கிட்டு இந்த தொகையை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.போக்குவரத்து தொழிலாளர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனைகளில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று மாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில்தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலாகியுள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று பல்லவன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago