சுகாதாரம், கல்வி, மகளிர் அதிகாரம் ஆகியவற்றில் எம்ஜிஆர் அதிக அக்கறை காட்டினார். அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாகூட்டரங்கில் நேற்று நடந்தது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் விழாவுக்கு தலைமை தாங்கினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக காணொலி முறையில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது:
மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டம், பட்டயங்கள் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவித்தனர். அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதற்காக பெண்களை பாராட்டுகிறேன்.
எம்ஜிஆர் ஆட்சி ஏழைகளின் ஆட்சியாக இருந்தது. சுகாதாரம், கல்வி, மகளிர் அதிகாரம் ஆகிய வற்றில் எம்ஜிஆர் அதிக அக்கறை காட்டினார். உங்கள் வெற்றி, மருத்துவக் கல்வி நிறுவனங்களின் வெற்றி ஆகியவை எம்ஜிஆரால் நடந்தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கரோனாவை பொறுத்தவரை, இந்தியாவில் குணமானோர் எண்ணிக்கை அதிகம். உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. உலகுக்கே தடுப்பூசிகளை தயாரித்து வழங்கி வருகிறது இந்தியா.
சிகிச்சை என்பது நோயாளி கள், மருத்துவர்கள், பராமரிப் பாளர்கள், மருந்து ஆகியவற்றை உள்ளடக்கியது என்று திரு வள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், கரோனாவை எதிர்த்து போராடிய அனைவரும் மனிதகுலத்தின் கதாநாயகர்கள்.
நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 2014-ம் ஆண்டைவிட 50 சதவீதம்அதிகம். மருத்துவ மேற்படிப்புகள் எண்ணிக்கை 24 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, 2014-ம்ஆண்டைவிட 80 சதவீதம் அதிகம்.2014-ல் 6 எய்ம்ஸ் மருத்துவமனை கள் இருந்தன. கடந்த 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும். இந்த ஒவ்வொரு கல்லூரிக்கும் மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கும்.
மக்களுக்கு சேவை செய்வது, இறைவனுக்கு பணிவிடை செய்வது போன்றது என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார். இந்த உன்னதமான, சவால் மிகுந்த மருத்துவத் துறையில் நீங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
விழாவில், ஆராய்ச்சிப் படிப்பு முடித்த 31 பேருக்கு (டி.எஸ்சி-1, பிஹெச்.டி-30) பட்டங்களை ஆளுநர் வழங்கினார். பல்கலைக்கழக இணை வேந்தரான சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் சுதா சேஷய்யன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnmgrmu.ac.in) விழாவைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது.
இந்த ஆண்டில் இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்புகள், மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள் முடித்த 21,889 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. நேரடியாக 32 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அவர்களது கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago