தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதனை புரிந்தோருக்கு விருது

By செய்திப்பிரிவு

தமிழக அரசின்கீழ் செயல்படும் அறிவியல் நகரம் அமைப்பானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுத் தொகையுடன் விருதும் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், தேசிய அறிவியல் தினத்தை (பிப்.28) முன்னிட்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நேற்று நடந்தது. அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் லக்கானி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அதன்படி, 2018-19-ம் ஆண்டுக்கான முதுநிலை அறிவியலாளர் பிரிவில் 6 பேருக்கும், இளம் அறிவியலாளர் பிரிவில் 4 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேபோல், சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் பிரிவில் 2018-19-ம் ஆண்டில் 10 ஆசிரியர்களுக்கும், 2019-20-ல் 8 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. முதன்முறையாக ஊரக கண்டுபிடிப்பாளர் விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதன்படி, தனிநபர் பிரிவில் காதுகேளாதோர் பாட்டு கேட்கும் கருவியை உருவாக்கிய கோத்தகிரி அரசுப் பள்ளி மாணவர் வி.தனுஷ் குமாருக்கும், குழு பிரிவில் சூரிய மின்சக்தியில் இயங்கும் காரை உருவாக்கிய சிவகங்கை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டது. இதற்கான பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்