திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மாசித் திருவிழாவில் பத்தாம் நாளான நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், பெரிய தேருக்கு பதில் வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் பவனி வந்தார்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளினர்.
கடந்த 23-ம் தேதி சுவாமி சிவப்பு சார்த்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும், 24-ம் தேதி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்தி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.
தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 7.05 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது. மாசித் திருவிழாவில் பெரிய மரத்தேரில் சுவாமி வீதியுலா வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா தடுப்பு நெறிமுறைகளால் பெரிய தேர் பவனி நடைபெறவில்லை. காலை 7.45 மணிக்கு வள்ளி, தெய்வானை அம்மனுடன், சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 8.25 மணிக்கு நிலையம் சேர்ந்தார். காலை 8.30 மணிக்கு தெய்வானை அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மாசித் திருவிழா நாளையுடன் நிறைவுபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago