கோவை மாவட்டத்தில் தேர்தல்பரப்புரையை மேற்கொள்வதற்காகவும், மத்திய அரசு திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திரமோடி நாளை(பிப்.25) கோவைக்கு வருகிறார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில், காவல் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கொடிசியா மைதானத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காவல்துறையினர், அங்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களை நிறுத்திவைத்துள்ளனர். நிரந்தர சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வழியாக செல்லும் சந்தேகத்துக்குரிய வாகனங்களில் செல்லும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் விவரங்களையும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும், தங்கும் நபர்கள் அனைவரிடமும் அடையாள ஆவண நகல் பெற வேண்டும் என விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார், ஆட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டுபவர்கள், சந்தேகத்துக்குரிய பயணிகளின் விவரத்தை தெரிவிக்க வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாநகர காவல் துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ தங்கும் விடுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படைகள் அமைத்து, தேடப்பட்டுவரும் நபர்களை கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னாள் குற்றவாளிகளின் நடத்தையை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கையாக கைது செய்யவும், பிணை உறுதிப்படுத்தி பிணைப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர் முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மூலம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago