சுபமுகூர்த்த தினமான நேற்று விருப்ப மனு அளிக்க திமுக நிர்வாகிகள் குவிந்தனர்

By செய்திப்பிரிவு

நேற்று முகூர்த்த நாள் என்பதால்விருப்ப மனு அளிக்க ஆயிரக்கணக்கான திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.17 முதல் 24-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இதற்கிடையே நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று விருப்ப மனு அளிப்பதற்கான காலஅவகாசம் பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி உள்ளிட்டோர் ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் பிரதோஷத்துடன் கூடிய வளர்பிறை, சுபமுகூர்த்த தினமான நேற்று விருப்ப மனு அளிக்க ஆயிரக்கணக்கான திமுகவினர், சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். இதனால் அண்ணா சாலையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலுர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட நேற்று விருப்ப மனு அளித்தார். அதேபோல், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - திருச்சி மேற்கு, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு - திருவண்ணாலை, தங்கம் தென்னரசு - திருச்சுழி, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

மேலும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதியிலும், கவிஞர் சல்மா மணப்பாறை தொகுதியிலும் போட்டியிட மனு அளித்தனர். திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிட கே.என்.நேருவின் மகன் அருண் நேரு விருப்ப மனு அளித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 234 தொகுதிகளிலும் போட்டியிட திமுக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.25) விருப்ப மனு அளிக்க இருப்பதாக அக்கட்சியினர் தெரி வித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE