திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், துளிர் கட்டுரை தொகுப்பு நூல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி தலைமை வகித்தார். மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் இரா.மணிவண்ணன், திருவாரூர் கல்வி மாவட்ட அலுவலர் டி.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமன் நூலை வெளியிட, இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் வா.சுரேஷ் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், யு.எஸ்.பொன்முடி பேசியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2020 மார்ச் மாதம் வரை துளிர் இதழ் அனுப்பப்பட்டது. அதன் பிறகு கரோனா ஊரடங்கு காரணமாக துளிர் இதழை அனுப்ப இயலவில்லை. எனவே, திறனறிதல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 9 மாத துளிர் இதழுக்குப் பதிலாக, துளிர் கட்டுரை தொகுப்பு நூல் வழங்கப்படும்” என்றார். இதில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் தெய்வ.பாஸ்கரன், ச.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago